
கோலாலாம்பூர், அக்டோபர்-13,
தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், பிரதமராக நியமிக்கப்பட்டதையும் எதிர்த்து வழக்கறிஞர் பி. வேத மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை இரத்துச் செய்யக் கோரி, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கு, தம்புன் தொகுதிக்கான 2022 பொதுத் தேர்தல் முடிவையே கேள்வி எழுப்பும் செயல் என, அக்டோபர் 10-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் அன்வார் வாதிட்டுள்ளார்.
வேதமூர்த்தியின் நடவடிக்கை, தேர்தல் முடிவுகளை எதிர்த்து தேர்தல் பெட்டிஷன் மனு மூலம் மட்டுமே வழக்குத் தொடுக்க முடியுமென்ற கூட்டரசு அரசியலமைப்பின் 118-வது பிரிவை மீறுவதாகவும் அந்த பி.கே.ஆர் தலைவர் கூறினார்.
குறிப்பாக, தேர்தல் நீதிபதியின் முன் வேதமூர்த்தியின் வழக்கு சமர்ப்பிக்கப்படவில்லை; மாறாக, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு வெளியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது;
இதையெல்லாம் விட, வேதமூர்த்திக்கு வழக்கைத் தாக்கல் செய்ய சட்டப்பூர்வ தகுதி இல்லை என்றும் அன்வார் வாதிட்டார்.
எனவே வெறும் அரசியல் ஆதாயத்திற்கு மட்டுமே தொடுக்கப்பட்ட இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென அன்வார் தனது மனுவில் கேட்டுக் கொண்டார்.
சிறையிலிருந்த அன்வாருக்கு 2018-ல் அரச மன்னிப்பு வழங்கப்பட்ட போது, தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
எனவே, 2022 பொதுத் தேர்தலில் தம்புன் தொகுதியில் அவர் வெற்றிப் பெற்றதும் பின்னர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதலும் செல்லாது என அறிவிக்கக் கோரி வேதமூர்த்தி நீதிமன்றத்தை நாடியுள்ளார்