
கோலாலம்பூர், டிசம்பர்-13 – மலேசியாவில் பிரதமர் பதவி மலாய்-முஸ்லீம்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என, முன்னாள் அம்னோ அரசியல்வாதி தான் ஸ்ரீ நோ ஓமார் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்காக கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
மலாய்க்காரர்கள் அரசியலமைப்பின் கீழ் முஸ்லீம்களாக வரையறுக்கப்படுவதால், நாட்டின் உயர்ந்த நிர்வாகப் பதவி மலாய்-முஸ்லீம்களிடமே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தற்போது, நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை ஆதரவை பெற்ற ஒருவரையே மாமன்னர் பிரதமராக நியமிக்கிறார்.
ஆக, அரசியலமைப்பில் பிரதமர் பதவிக்கு இனம் அல்லது மத அடிப்படையிலான எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பதை, தற்சமயம் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருப்பவருமான அவர் சுட்டிக் காட்டினார்.
சிலாங்கூரில் மலாய் முஸ்லீமாக இருப்பவர் மட்டுமே மந்திரி பெசாராக முடியும் என மாநில அரசு சாசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் நோ ஓமார் ஒப்பிட்டு பேசினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற Melayu 153 மாநாட்டில் பேசிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
முன்னாள் அமைச்சருமான நோ ஓமாரின் இப்பேச்சு, நாட்டில் இனம், மதம் மற்றும் ஆட்சி தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.



