
சென்னை, ஆகஸ்ட்-3,
பிரபல இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்றிரவு பிரமாண்டமாக நடைபெற்றது.
சூப்பர் ஸ்டாரோடு போலீவூட் நட்சத்திரம் அமீர் கான், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, கன்னட நடிகர் உபேந்திரா, நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் என, படத்தில் நடித்துள்ள பெரிய நடிகர் பட்டாளமே விழாவுக்கு வந்திருந்தனர்.
விழா அரங்கிற்குள் பெரும் கரகோஷத்துக்கு மத்தியில் நுழைந்த ரஜினிகாந்தின் கால்களைத் தொட்டு அமீர் கான் மரியாதை செய்த வேளையில் அமீர் கானை ரஜினிகாந்த் கட்டித் தழுவியபோது இரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
படத் தயாரிப்பாளரான சன் குழுமத்தின் கலாநிதி மாறனும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மேடையில் கூலி படப் பாடல்களை பாடி வழக்கம் போல் அனிருத் அரங்கை அதிரச் செய்தார்.
‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கூலி’ ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது.