
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – மலேசியக் கொடி தலைகீழாகத் தொங்கவிட்ட சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து, அவசரப்பட்டு அனுமானங்களைச் செய்ய வேண்டாமென்று பொதுமக்களுக்கு தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் வலியுறுத்தியுள்ளார்.
1963ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் சட்டத்தின் படி, தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றுவது தவறானது என்றாலும், அந்தச் சம்பவத்தின் உண்மையான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், ஒற்றுமை உணர்வின் அடிப்படையில், முழுமையான விசாரணையின் முடிவுகள் வரும்வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.
தனிநபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள், சூழ்நிலையை மோசமாக்கும் வகையில் ஆத்திரமூட்டும் செயல்கள் அல்லது அறிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொருத்தமான நடவடிக்கையை அதிகாரிகளிடம் விட்டுவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மக்கள் கொடியை ஏற்றுவதில் பயப்படவோ தயங்கவோ கூடாது என்றும், மாறாக சரியான நடைமுறையைப் புரிந்துகொண்டு, தேசிய மாதக் கொண்டாட்டத்துடன் இணைந்து தகவல் தொடர்பு அமைச்சின் ‘1 ஹவுஸ், 1 ஜாலுர் ஜெமிலாங்’ பிரச்சாரத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இது போன்ற சம்பவங்கள் மேலும் நடவாமலிருக்க தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்புத் துறைக்கு, ருக்குன் தேத்தங்கா பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தவும், ருக்குன் நெகாரா கழகத்தின் வாயிலாக தேசியக் கொடியை சரியாக ஏற்றும் முறையை மக்களுக்கு உணர்த்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.