
புத்ரா ஜெயா , பிப் 28 – பிரெஸ்மா ( Presma ) எனப்படும் மலேசிய முஸ்லீம் தொழில் முனைவோர் சங்க உறுப்பினர்களின் சுமார் 12,000 உணவகங்களில் சர்க்கரை (சீனி ) குறைவான அல்லது சர்க்கரை இல்லாத பானங்களை அருந்தும்படி மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்வழி அவர்கள் ஒரு கிளாசிற்கு 30 சென் குறைந்த விலையில் பானங்களை பெறமுடியும். இந்தச் சலுகை மற்றும் முன்முயற்சியானது பயனீட்டாளர்களுக்கு சிக்கனமானது மட்டுமின்றி அதிகமான சீனியை பயன்படுத்தாமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும் வளர்க்கிறது என்று அன்வார் கூறினார்.
சர்க்கரையை குறைத்தால் அதன் விலையும் குறையும். இப்போது பானங்களில் சர்க்கரை இருந்தாலும் இல்லாவிட்டாலும் விலை ஒன்றாகத்தான் இருக்கிறது.
இனி அதனை வேறுபடுத்தும் வகையில் சர்க்கரையை பயன்படுத்தாத பானங்கள் 30 சென் குறைந்த விலையில் கிடைக்கும்.
எனவே குறைந்த சர்க்கரையை குறைப்பதற்கான இயக்கத்தை நாம் மேற்கொள்வோம் என புத்ரா ஜெயா நாசி கண்டார் உணவகங்களில் மலேசிய மடானி சின்னத்தை பயன்படுத்தும் நிகழ்வை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அன்வார் தெரிவித்தார்.
இதனிடையே குறைந்த சர்க்கரை அல்லது சீனியை பயன்படுத்தாத பானங்களுக்கு குறைந்த விலை நாடு முழுவதிலும் உள்ள Presma உணவகங்களில் அமல்படுத்தப்பட்டதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக Presmaவின் தலைவர் டத்தோ Jawahir Ali Taib Khan தெரிவித்தார்.