
கோலாலம்பூர், டிசம்பர்-15 – “தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து விலகிச் சென்றால், சென்றது தான்; திரும்ப வந்தாலும் சேர்த்துக் கொள்ள மாட்டோம்” என அதன் உறுப்புக் கட்சிகளுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, எதையும் தீர ஆலோசித்தே முடிவெடுக்குமாறு தேசிய முன்னணித் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி எச்சரித்தார்.
அவர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், ம.இ.காவைத் தான் குறிப்பிடுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
“அரசியலில் உணர்ச்சிவசப்படுதல் கூடாது; பொறுமையும் நிதானமும் தேவை; மாறி வரும் அரசியல் சூழலில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்து விட்டு பின்னர் வருத்தப்படுவதில் எந்த பயனுமில்லை” என்றார் அவர்.
எனவே, யார் மீதோ உள்ள அதிருப்தியாலோ அல்லது ‘அதிகார போதையாலோ’ முடிவெடுக்காமல், 70 ஆண்டு கால தேசிய முன்னணி உணர்வையும் விசுவாசத்தையும் சம்பந்தப்பட்டவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமென்றார் அவர்.
செமஞேவில் IPF கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியப் பிறகு சாஹிட் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதனிடையே, ம.இ.கா இன்னமும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியே என, அதன் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
“ம.இ.கா பொதுப் பேரவை கொடுத்த அதிகாரத்தின் படி மத்திய செயலவை இறுதி முடிவெடுக்கும் வரை, நாங்கள் கூட்டணியில் தான் இருக்கின்றோம், இருப்போம்” என்றார் அவர்.
கட்சியின் எதிர்காலம் பற்றி விவாதிக்க மத்திய செயலவை இன்னமும் தேதியை நிர்ணயிக்கவில்லை; கூட்டத் தேதி முடிவானதும், தனிநபராக அல்லாமல் மத்திய செயலவை ஒரு கூட்டு முடிவை எடுக்கும் என அவர் சொன்னார்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், அத்தொகுதியைச் சேர்ந்த 50 அரசு மற்றும் தனியார் பல்லைக்கழக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கிய நிகழ்வுக்குப் பிறகு அவ்வாறு பேசினார்.
2022 பொதுத் தேர்தலுக்கு பிறகு தேசிய முன்னணியில் வேண்டாத விருந்தாளியைப் போல் நடத்தப்படுவதாக ம.இ.காவினர் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், கடந்த மாத பொதுப் பேரவையில் தேசிய முன்னணியிலிருந்து வெளியேறி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணையத் தீர்மானம் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.
எனினும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தைப் பேராளர்கள், தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கும் மத்திய செயலவைக்கும் வழங்கியுள்ளனர்.



