கலிஃபோர்னியா, டிசம்பர்-11, குவாண்டம் கணினி உலகில் மாபெரும் முன்னேற்றமாக Willow என்ற பெயரில் புதியத் தலைமுறை சில்லு (chip) ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கூகுள் நிறுவனத்தின் குவாண்டம் ஆய்வகத்தில் இப்புதியச் சில்லு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்புதியக் கணினி வன்பொருள், குவாண்டம் கணினி தவறுகளை அதிரடியாகக் குறைக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
அதோடு, மிக மிக சிக்கலான கணக்குகளை அதிவேக சூப்பர் கம்யூட்டர்களை விட, பன்மடங்கு வேகமாக இந்த Willow சில்லுவால் தீர்க்க முடியும்.
இன்னும் எளிதாகச் சொல்வதென்றால், சிக்கலானக் கணக்குகளைத் தீர்க்க இப்புதியச் சில்லு வெறும் 5 நிமிடங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறது.
அதே சிக்கலைத் தீர்க்க சூப்பர் கம்யூட்டர்களுக்கு பில்லியன் கணக்கான ஆண்டுகளாகும்.
இது, இந்த பிரபஞ்சம் தோன்றியக் காலத்தை விட அதிக காலமென்பது குறிப்பிடத்தக்கது.
105 குபிட்ஸ்கள் (qubits) மூலம் இயங்கும் இந்த Willow சில்லுகள், முந்தையத் தலைமுறை குவாண்டம் சில்லுகளை விட 5 மடங்கு சிறப்பாக செயல்படக் கூடியவை.
நடப்பிலுள்ள கணினி அமைப்பு முறையைக் காட்டிலும் பன்மடங்கு வேகமான கணினி முறையை அமைப்பதற்கான போட்டியில், மைக்ரோசோஃவ்ட் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜாம்பவான்கள் நீண்ட காலமாகவே ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கணினித் தொழில்நுட்ப உலகில் புரட்சியாக கூகுளின் இந்த குவாண்டம் Willow சில்லு அறிமுகமாகியுள்ளது.
எதிர்காலத்தில் மருத்துவம், AI அதிநவீனத் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் மனிதர்களுக்கு இது பெரிதும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.