Latestமலேசியா

புக்கிட் செந்தோசாவில் எலிகள் & கரப்பான்பூச்சிகளால் சூழ்ந்திருந்த உணவகங்களுக்கு மூடல் உத்தரவு – ஹுலு சிலாங்கூர் ஊராட்சி மன்றம்

ஹுலு சிலாங்கூர், டிசம்பர் 16 – புக்கிட் செந்தோசா, ஹுலு சிலாங்கூர் பகுதியிலுள்ள Jalan Telipot மற்றும் Jalan Seroja சாலைகளில் செயல்பட்டு வந்த இரண்டு உணவகங்களில் எலிகளும் கரப்பான்பூச்சிகளும் காணப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடங்களை 14 நாட்கள் மூடுவதற்கு ஹுலு சிலாங்கூர் ஊராட்சி மன்றமான MPHS உத்தரவிட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்த துறையான JPSPPA நடத்திய ஆய்விற்குப் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக MPHS தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில், உரிய உரிமம் இன்றி செயல்படுதல், எலிகள் மற்றும் கரப்பான்பூச்சிகளின் கழிவுகள் காணப்படுதல், உணவு கையாளுபவர்கள் ‘டைபாய்டு’ தடுப்பூசியைப் போடாமல் இருத்தல் மற்றும் உணவு கையாளும் பயிற்சியை முடிக்காதது போன்ற கடுமையான விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

மேலும், வெப்பநிலை கட்டுப்பாடு இல்லாத குளிர்சாதன பெட்டிகள், சுத்தமில்லாத சமையல் உபகரணங்கள் மற்றும் கழிப்பறைகள், நீர் தேங்கி வழுக்கும் சமையலறை தரை, பராமரிக்கப்படாத கழிவு பிடிப்புகள் காரணமாக பொது கால்வாய்களில் கழிவு ஒழுகுதல், மற்றும் குறுக்கு மாசுபாட்டிற்கு வழிவகுக்கும் ஆபத்தான நடைமுறைகள் இருந்ததாக MPHS கூறியுள்ளது.

இந்த மீறல்களுக்காக, 2007 ஆம் ஆண்டு உணவு நிலையங்கள் துணைச்சட்டம் மற்றும் உணவு கையாளுநர்கள் துணைச்சட்டத்தின் கீழ் மொத்தம் 19 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் MPHS தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!