
கோலாலம்பூர், நவம்பர் 8 -நேற்றிரவு கிள்ளான் புக்கிட் திங்கி பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில்34 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அக்காணொளியில் இரத்தத்தில் மூழ்கிய நிலையில் ஒருவர் தரையில் படுத்திருந்ததும், சம்பவ இடத்தில் பல போலீஸ் வாகனங்களும் அதிகாரிகளும் இருப்பதையும் காண முடிந்தது.
சிசிடிவி காட்சிகளின்படி, மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர், பெட்ரோல் நிலையத்தில் வாகனத்தை நிறுத்தியிருந்த அந்த நபர் மீது பல துப்பாக்கி குண்டுகளை ஏவிய பின்னர், குற்றவாளி அங்கிருந்து தப்பியோடியுள்ளான் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர், டத்தோ ஷசேலி கஹார் (Datuk Shazeli Kahar) தெரிவித்தார்.
மரணமடைந்த அந்நபர் தற்போது வேலைவாய்ப்பு இன்றி இருந்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை குற்ற வழக்கைப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளியை அடையாளம் காணும் பணியிலும், கொலையின் நோக்கத்தை கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.



