மலேசியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அழிந்து வரும் 379 விலங்குகள் பெங்களூருவில் பறிமுதல்

பெங்களூரு, ஜனவரி-3, மலேசியாவிலிருந்து இந்தியாவின் பெங்களூருக்கு கடத்திச் செல்லப்பட்ட அழிந்து வரும் 379 விலங்குகளை, இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், பாத்திக் ஏர் மலேசிய விமானம் கெம்பேகவுடா (Kempegowda) அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.20 மணிக்கு வந்திறங்கிய போது, ஒரு பயணியின் லக்கேஜை சோதனையிட்டதில் அவ்விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பச்சை பச்சோந்திகள், pacman தவளைகள், ஆப்பிரிக்க ஆமைகள் மற்றும் ஒரு ராட்சத கெக்கோ உள்ளிட்ட விலங்குகளே பறிமுதல் செய்யப்பட்டன.
பெரும்பாலும் மிகச் சிறிய உடலமைப்பைப் கொண்ட அவ்விலங்குகள், துணிமணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
ஒரே பெட்டிக்குள் அடைக்கும் அளவுக்கு அவை மிகவும் இறுக்கமாக அடுக்கி வைக்கப்பட்டதில், 8 தவளைகள் மூச்சுத் திணறியே இறந்துள்ளன.
கைப்பற்றப்ப விலங்குகள் விரைவிலேயே மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் என அதிகாரிகள் கூறினர்.
இந்திய நாட்டவரான அந்தத் கடத்தல்காரர் மீது
வனவிலங்கு சட்டம் மற்றும் சுங்கச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆசிய நாடுகளிலிருந்து சென்னை வழியாகத் தான் இந்தியாவுக்கு காட்டு விலங்குகள் கடத்தப்பட்டு வந்தன.
ஆனால், அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவும் நோக்கில், அண்மைய காலமாக பெங்களூருக்கு அது இடம் மாறியுள்ளதாகத் தெரிகிறது.