
கோலாலம்பூர், டிச 13 – புக்கிட் பிந்தாங் பகுதியைச் சுற்றி இயங்கி வந்த சட்டவிரோத வாகன நிறுத்துமிடத்தின் நடவடிக்கையை முறியடித்த போலீசார், ஏழு வெளிநாட்டவர்களை கைது செய்தனர். நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையை புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணை மேற்கொண்டதாக அதன் இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி ( Yusri Hassan Basri ) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 36 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களிடமிருந்து வாகன நிறுத்த நடவடிக்கைகளின் விளைவாக வசூல் செய்ததாக கருதப்படும் 445 ரிங்கிட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு வெவ்வேறு இடங்களில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதோடு இந்த சட்டவிரோத பார்க்கிங் நடவடிக்கை ஒரு கும்பல் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்ததோடு , ஒவ்வொரு வாகனத்திற்கும் சுமார் 10 ரிங்கிட் முதல் 15 ரிங்கிட்வரை கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக யுஸ்ரி ஹசான் கூறினார்.