புத்ராஜெயா, டிசம்பர்-10, புத்ராஜெயா, பிரிசின்ட் 11-ல் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மூழ்கிய 20 கார்களின் உரிமையாளர்களுக்கு, தலா 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது.
அதோடு, குறுகியக் காலத் தீர்வாக அப்பகுதியில் சுமார் 200 வாகனங்களை வைக்கக்கூடிய அளவில் தற்காலிக கார் நிறுத்துமிடத்தை, புத்ராஜெயா கழகம் அமைத்துத் தரவுள்ளது.
2 வாரங்களில் அதனைச் செய்து முடிக்குமாறு கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாஃபா (Dr Zaliha Mustafa) அக்கழகத்தைக் கேட்டுக் கொண்டார்.
நீண்ட காலத் தீர்வுக்கு, வடிகால் நீர்பாசனம் மற்றும் வடிகால் துறையுடன் அமைச்சு அணுக்கமாக ஒத்துழைக்கும்.
இது தவிர்த்து, வெள்ளம் போன்ற ஆபத்து அவசர காலங்களில் வாகனங்களை அப்பகுதி வாழ் மக்கள் முன்கூட்டியே அப்புறப்படுத்த ஏதுவாக, சைரன் ஒலியுடன் கூடிய எச்சரிக்கை முறையை அமுல்படுத்துமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
வெள்ள நீர் மட்டத்தை கண்டறிய புத்ராஜெயா முழுவதும் வடிகால் பராமரிப்புக் கட்டங்களில் சென்சர் (sensor) கருவிகளைப் பொருத்துவதன் மூலம் அது சாத்தியமாகலாம் என்றார் அவர்.
Dr சாலிஹா முன்னதாக சம்பவ இடத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் பிரிசின்ட் 11-ல் உள்ள சமயப் பள்ளி வளாகத்தில் திடீர் வெள்ளமேற்பட்டு, 20 வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வீடியோக்கள் முன்னதாக வைரலாகின.