
பூச்சோங், ஏப்ரல்-2 – பூச்சோங், புத்ரா ஹைட்ஸில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளைப் பாதித்து 112 பேர் காயமடையக் காரணமான எரிவாயு குழாய் தீ விபத்து குறித்து, சிலாங்கூர் அரசு உடனடியாக ஒரு சுயேட்சை விசாரணையை நடத்த வேண்டும்.
எதிர்கட்சியான PN எனப்படும் பெரிகாத்தான் நேஷனலின் சிலாங்கூர் மாநில கிளை அவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
வீடுகளை இழந்து, மறுவாழ்வுக்கான அதிக செலவைச் சந்திக்கும் குடும்பங்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு, சிலாங்கூர் பெரிக்காத்தான் தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்து விரிவாக விவாதிக்க சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு, சிலாங்கூர் மந்திரி பெசாரையும் PN வலியுறுத்தியது.
இவ்வேளையில், மீட்புப் பணியை மேற்கொள்ள கடுமையாக உழைத்த தீயணைப்புப் படை, போலீஸ் படை மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் முயற்சிகளை அஸ்மின் அலி பாராட்டினார்.
அதே சமயம், பொதுப் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக, எரிவாயு குழாய்களைச் சுற்றியுள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஒப்புதல் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் PN மாநில அரசை வலியுறுத்துகிறது.
பெட்ரோனாஸ் நிறுவனம் முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, காயங்கள் மற்றும் இழப்புகளைச் சந்தித்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அஸ்மின் பரிந்துரைத்தார்.
எரிவாயுக் குழா வெடிப்புச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.