
பூச்சோங், ஏப்ரல்-10, பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பால் பாதிக்கப்பட்ட கார்டெனியா ரொட்டி தயாரிப்பு முழுமையாக மீண்டிருக்கின்றது.
எரிவாயுக் கையிருப்பு இடையூறின் போது ரொட்டி உற்பத்தி தொடருவதை உறுதிச் செய்ய ஏதுவாக, மின்சாரம் மற்றும் டீசல் உள்ளிட்ட மாற்று எரிபொருள் வளங்களை கார்டெனியா நிறுவனம் பயன்படுத்தியது.
இதையடுத்து ஏப்ரல் 6-ஆம் தேதி ரொட்டி உற்பத்தி வழக்க நிலைக்குத் திரும்பி விட்டதாக அறிக்கையொன்றில் அது கூறியது.
இதன் மூலம், பல பகுதிகளில் ஏற்பட்ட ரொட்டி கையிருப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்பட்டிருப்பதாக கார்டெனியா விளக்கியது.
கார்டெனியா ரொட்டிகளைப் போலவே, மாசிமோ ரொட்டிகளும் புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவத்தால் முன்னதாக பாதிப்பு ஏற்பட்டது.
பழுதுபார்ப்புப் பணிகளுக்கு வழி விடுவதற்காக, LNG எனப்படும் திரவ இயற்கை எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதால் ரொட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும், மாசிமோ ரொட்டி உற்பத்தியும் தற்போது வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.
இவ்வேளையில், முதன்மை ரொட்டி உற்பத்தி நிறுவனங்களின் சேவை வழக்க நிலைக்குத் திரும்பினாலும், போக்குவரத்து பிரச்னைக் காரணமாக, உட்புறப் பகுதிகளுக்கான சில்லறை ரொட்டி விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்ப சற்று காலம் பிடிக்கலாம்.
மலேசிய மளிகைப் பொருட்கள் வியாபாரிகள் சங்கங்களின் சம்மேளனம் அவ்வாறு கூறியது.