அலோஸ்டார், அக் 17 – புழுக்களைக் கொண்ட உப்பு முட்டையை விற்பனை செய்த அலோஸ்டாரிலுள்ள நாசி கண்டார் கடையை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1983ஆம் ஆண்டின் உணவு சட்டத்தின் 2009 ஆம் ஆண்டின் உணவு தூய்மை விதிகளின் அவசியத்தை பின்பற்றத் தவறியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டடதாக கெடா மாநில சுகாதாரத்துறையின் இயக்குனர் டாக்டர் இஸ்முனி பொஹாரி ( Ismuni Bohari ) தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று சுங்கைப் பட்டாணி மக்கள் முகநூல் மூலமாக புகார் செய்ததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த கடையில் உணவு உட்கொண்ட வாடிக்கையாளர் உப்பு முட்டையில் புழுக்களை பார்த்ததைத் தொடர்ந்து மாநில சுகாதாரத் துறை புகாரை பெற்றது. இந்த விவகாரம் சமூக வலைத்ளங்களிலும் வைரலானதை தொடர்ந்து புகார்தாரரிடம் விளக்கம் கேட்டு உறுதிப்பபடுத்தப்பட்ட பின்னர் கோலா மூடா மாவட்ட சுகாதாரத்துறை மூலமாக கெடா சுகாதாரத்துறை நேற்று விசாரணையை நடத்தியதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் இஸ்முனி தெரிவித்தார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு உணவுச் சட்டம் 1983 இன் கீழ் உணவு விதிமுறைகளுடன் உணவு வளாகங்கள் செயல்படுவதை கெடா சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்துவரும் என்று இஸ்முனி தெரிவித்தார்.