
பூச்சோங், ஜனவரி 27 – பூச்சோங் 14வது மைலிலுள்ள கம்போங் பூங்கா மெல்லூர் (Kg. Bunga Melur) பகுதியில் கடந்த ஜனவரி 25ஆம் திகதி இரவு, வீடு ஒன்றுக்குள் நுழைந்து இருவரை தாக்கிய 11 பேர் கொண்ட கும்பலிலிருந்து 6 பேர் கையும் களவுமாகப் பிடிப்பட்டுள்ளனர்.
சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில், முகமூடி அணிந்த அக்கும்பல், மூன்று கார்களில் அங்கு வந்த நிலையில், அந்த வீட்டிற்குள் பாரங் கத்திகளை ஏந்தி இரு நபர்களைத் தாக்கியுள்ளது.
அந்த தாக்குதலில், முதல் நபர் தோள்பகுதியில் காயமடைந்த நிலையில், இரண்டாவது நபருக்கு உடல், கைகள், கால்கள் மற்றும் பிற பகுதிகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.
அத்தாக்குதலின் போது, அவர்களிடமிருந்து Honor X9 கைப்பேசி, Mazda கார் மற்றும் வீட்டின் சாவிக் கொத்தும் திருடப்பட்டிருக்கிறது.
அச்சம்பவத்தை தொடர்ந்து, நேற்று மாலை 8 மணியளவில், JSJ D7 IPK Selangor பிரிவைச் சேர்ந்த போலீசார் ASP ரகுநாத் தலைமையில், Insp. நொரிஷாமுதீன் மற்றும் D9 IPD Subang Jaya குழுவினர் இணைந்து, ஶ்ரீ கெம்பாங்கான் (Seri Kembangan) V3 Cafe & KTV-ல் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே கைதானவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் போதை தொடர்பான வழக்குகள் இருப்பதும் அம்பலமாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், மீதமுள்ள குற்றவாளிகளை பிடிக்கவும், தாக்குதலுக்கான காரணத்தை உறுதிப்படுத்தவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.