
லண்டன், பிப்ரவரி-22 – LCA அல்லது Leber congenital amaurosis எனப்படும் அரிய மரபணு நிலையுடன் பிறந்த குழந்தைகளின் குருட்டுத்தன்மையை, உலகிலேயே முதன் முறையாக குணப்படுத்தி பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
LCA என்பது AIPL1 மரபணுவில் உண்டாகும் குறைபாடு காரணமாக குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் விழித்திரை சிதைவின் ஒரு கடுமையான வடிவமாகும்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிறப்பிலிருந்தே பார்வையற்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், அத்தகையக் குழந்தைகளின் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவர்கள் ஒரு முன்னோடி மரபணு சிகிச்சையைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
AIPL1 மரபணுவின் ஆரோக்கியமான நகல்களை எடுத்து keyhole அதாவது சிறிய துளையிடும் அறுவை சிகிச்சை மூலம் செலுத்தியதில், அத்தகைய 4 குழந்தைகளுக்கு இதுபோன்ற குருட்டுத்தன்மை குணமாகியுள்ளது.
அதற்கு மருத்துவர்கள் வெறும் 1 மணி நேரமே எடுத்துக் கொண்டனர்.
மரபணுவின் ஆரோக்கியமான நகல்களில் இருந்த ஒரு பாதிப்பில்லாத வைரஸ் குழந்தைகளின் விழித்திரைக்குள் செலுத்தப்பட்டது.
குழந்தைகளால் இப்போது வடிவங்களைப் பார்க்கவும், பொம்மைகளைக் கண்டுபிடிக்கவும், பெற்றோரின் முகங்களை அடையாளம் காணவும், சில சமயங்களில் படிக்கவும் எழுதவும் கூட முடிகிறது.
கண் மருத்துவ உலகில் இதுவொரு மகத்தான சாதனை எனக் குறிப்பிட்ட Moorfields கண் மருத்துவமனையின் விழித்திரை நிபுணர் பேராசிரியர்
Michel Michaelides, மரபணு சிகிச்சைக்கு
வாழ்க்கையையே மாற்றக்கூடிய சக்தி இருப்பதை இது காட்டுவதாக பெருமிதம் தெரிவித்தார்.