
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒரு முன்னணி வணிக வளாகத்தின் நுழைவாயிலில் யானை தந்தத்திலான பிடிகொண்ட கிரிஸ் கத்திகள் மற்றும் வனவிலங்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலை தடுக்கும் நோக்கில், வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (PERHILITAN) மற்றும் பொது செயல்பாட்டுப் படை (PGA) இணைந்து நடத்திய சிறப்பு சோதனையில், இரண்டு வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
முதல் இடத்தில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், மொத்தம் 10 கிரிஸ் கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அறியப்படுகின்றது.
சந்தேக நபர் வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் செல்லுபடியாகும் உரிமத்தை வழங்கத் தவறியதால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் படி அனைத்து பொருட்களுமே பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டாவது சோதனையில், யானை தந்தம், காட்டு விலங்கு தந்தம் மற்றும் வனவிலங்கு எலும்புகள் என மொத்தம் 13,350 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த இரு சந்தேக நபர்களும் தலா 10,000 ரிங்கிட் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம், குறிப்பாக யானை போன்ற அழிந்து வரும் உயிரினங்களை நேரடியாக அச்சுறுத்துகிறது என்றும் இதுப்போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்றும் PERHILITAN இயக்குநர் ஜெனரல் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் (Datuk Abdul Kadir Abu Hashim) கூறினார்.