
சிரம்பான், ஏப்ரல்-9- பெண்களின் உள்ளாடைகள் திருடப்படுவது ஒன்றும் புதிதல்ல; அவ்வப்போது ஊடகங்களில் வரும் செய்தி தான்.
கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும் ஆங்காங்கே இந்த ‘திருட்டு’ அரங்கேறி தான் வருகிறது.
அண்மையில் கூட சிரம்பான், கம்போங் பாரு ராசாவில் வீட்டின் சுவரேறி குதித்து ஓர் ஆடவர் அவ்வேலையைப் பார்த்துள்ளார்.
லாரியை வீட்டுக்கு வெளியே நிறுத்தி விட்டு, கொடியில் காய்ந்துக் கொண்டிருந்த பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, தன் சட்டைக்குள் போட்டுக்கொண்டு அவர் தப்பிச் சென்றார்.
என்றாலும் CCTV கேமராவில் முகம் பதிவானதால், அவர் போலீஸிடம் சிக்கினார்.
புதன்கிழமை போலீஸிடம் சரணடையச் சென்ற போது அவர் கைதானார்.
பாதிக்கப்பட்ட 27 வயது பெண், தன் வீட்டில் காய வைக்கப்படும் உள்ளாடைகள் காணாமல் போவது புது விஷயமல்ல என்றார்.
“பாட்டி உயிரோடு இருக்கும் போதே அவரின் உள்ளாடைகள் மாயமாகியுள்ளன; ஆனால் அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; ஆனால் எனக்கும் என் அக்காவுக்கும் கூட இதே சம்பவம் நடந்த போது தான் நாங்கள் அதிர்ச்சியானோம்” என அவர் சொன்னார்.
இப்படி பெண்களின் உள்ளாடைகள் திருடப்படுவது ஏதோ ஆண்களின் ‘குறும்புத்தனம்’ தான் என நாம் கடந்துபோய் விட முடியாது.
ஊரார் வீட்டின் சுவரேறிக் குதித்து திருடும் அளவுக்கு நிலைமை போகிறது என்றால், இது நிச்சயமாக ஓர் உளவியல் ரீதியான பாதிப்பாகும்.
நகைச்சுவையாகக் கருதி புறக்கணித்து விட்டால், நாளையே இது வேறொரு பிரச்னையாக மாறி புதியத் தலைவலியாகி விடும்.
எனவே இவ்விவகாரம் பொதுப்படையாக விவாதிக்கப்பட வேண்டும்.
இது மற்றவர்களை அவமானப்படுத்துவதற்காக அல்ல; மாறாக உரியத் தீர்வைக் காண்பதற்காகத்தான்.