
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – மக்களவை அமர்வின் போது பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலர் சட்டைகளை அணிய வேண்டியக் கட்டாயமில்லை; எனவே அதனை யாரும் பிரச்னையாக்க வேண்டாம் என, தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவை விதிகளின்படி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய உடை, கை நீளம் அளவு கொண்ட ஆடை அல்லது முழங்கால் அளவிற்கு குறையாத பாவாடை அணிய வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
காலர் சட்டைகளை அணிய வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு எதுவும் இல்லையென, கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
மக்களவையில் விவாதிக்கப்பட வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் இருக்கும்போது, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடைகளைப் பற்றி ஒரு பிரச்சனையாக சில ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை மக்களவையில், சட்ட உதவி மற்றும் பொது பாதுகாப்பு மசோதா 2025 முடிவுக்குக் கொண்டுவரும் சமயத்தில், உலு திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசோல் வாஹிட், காலர் சட்டை தொடர்பில் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மானின் உடையை விமர்சித்திருந்தார்.
அவை நிலைக்குழு உத்தரவுக்கு முரணாக இல்லாத வரை, இதுபோன்ற பிரச்சனையாக எழுப்பக்கூடாது என மக்களவை சபாநாயகர் டான் ஸ்ரீ டாக்டர் ஜொஹாரி அப்துல் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.