
பெனாந்தி, மே-9- நில பிரச்னையை எதிர்நோக்கியிருந்த பினாங்கு பெனாந்தி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயம், அதன் உரிமையாளரிடமிருந்து 550,000 ரிங்கிட்டுக்கு நிலத்தை வாங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது தெரிந்ததே.
நிபந்தனைப்படி, 50,000 ரிங்கிட் முதல் தவணைக் கட்டணம் இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் செலுத்தப்பட வேண்டும்.
நீதிமன்ற ஆணைப்படி 12 மாதங்களில் அக்கட்டணம் முழுமையாகக் கட்டப்பட வேண்டும்.
ஆலய நிர்வாகமும் எப்படியோ 50,000 ரிங்கிட்டை புரட்டி விட்டது.
இந்நிலையில், பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ்.சுந்தரராஜு தனியாக 100,000 ரிங்கிட்டை திரட்டிக் கொடுத்துள்ளார்.
தனது நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகள் மூலம் அத்தொகைத் திரட்டப்பட்டது.
இதையடுத்து 2 தவணைகளுக்குச் செலுத்த வேண்டியத் தொகை திரண்டிருப்பதை, ஆலயத்திற்கு வருகை மேற்கொண்ட போது சுந்தரராஜு அறிவித்தார்.
எஞ்சிய 400,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகையை அடுத்த 6 மாதங்களில் திரட்டி விட முடியும்;
நன்கொடைத் திரட்டு விருந்தையும் நடத்தலாமென, ஆலய நிர்வாகத்துக்கு அவர் ஆலோசனைக் கூறினார்.
பொது மக்களும் நன்கொடையாளர்களும் முன் வந்து தங்களால் இயன்றதை வழங்கி உதவுமாறும், இந்நேரத்தில் அவர் கேட்டுக் கொண்டார்.
பினாங்கில் பாரம்பரியமிக்க கோயில்களில் ஒன்றான இந்த பெனாந்தி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தைப் பாதுகாப்பது நமது கடமையாகும் என்றார் அவர்.