கோலாலம்பூர், நவ 4 – கோலாலம்பூர், நவ 4 – 2024 – 2027 ஆம் ஆண்டுக்கான பெர்சத்து கட்சியின் தேர்தல் முடிவு இன்று வெளியான நிலையில், தலைவராக பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் துணைத் தலைவராக லாருட் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில் முஹிடின் முன்மொழிந்த சமரசத் திட்டத்தின்படி அவரது மூன்று முக்கிய ஆதரவாளர்கள், உதவித் தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளில் வெற்றி பெற்று அவரது கரத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அறுவர் போட்டியிட்டதால் அதன் முடிவு கடுமையாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதினர்.
எனினும் முஹிடின் ஆதரவோடு களம் இறங்கிய நடப்பு உதவித் தலைவராக இருந்த புத்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ரட்ஷி ஜிடின், பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரோனல்ட் கியான்டி ஆகியோர் தங்களது பதவிகளை தற்காத்துக் கொண்டனர்.
பேராக்கின் முன்னாள் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமுவும் உதவித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஏற்கனவே கட்சியின் துணைத்தலைவராக இருந்த அகமட் பைசால் அசுமு இம்முறை துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். கட்சியின் 20 இடங்களுக்கான உச்சமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றி பெற்றவர்களில் மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமட் பெசால் ( Wan Ahmad Fayhsal ) , பகாங் இந்திரா மகோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சைபுடின் அப்துல்லா, உலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ரோசோல் வாஹிட் ( Rosol Wahid ) ஆகியோரும் அடங்குவர். மேலும் தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அபிவ் பஹார்டின் ( Afif Bahardin), Bemban சட்டமன்ற உறுப்பினர் யட்ஷில் யாக்கோப் ( Yadzil Yaakub ), ஜோகூர் முன்னாள் மந்திரிபுசார் Sahruddin Jamal ஆகியோரும் உச்ச மன்ற உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.