
கோலாலம்பூர், செப்டம்பர்-8- பெர்சாத்து இளைஞர் பிரிவு பேராளர் மாநாட்டில் ம.இ.கா இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் கே. கேசவன் பங்கேற்ற சம்பவம் குறித்து, தேசிய முன்னணித் தலைமையிடம் விளக்கமளிக்க ம.இ.கா தயாராக உள்ளது.
ஆனால் இதுவரை கடிதம் எதனையும் தாம் பெறவில்லை என, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முறைப்படி விளக்கம் கேட்கப்பட்டால், அதனை வழங்குவதில் ம.இ.காவுக்குப் பிரச்சனை எதுவும் இல்லை என்றார் அவர்.
பெர்சாத்து எதிர்கட்சி என்பதால் அதன் மாநாட்டில் பங்கேற்ற கேசவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்தும் கட்சி அளவில் இதுவரை விவாதிக்கப்படவில்லை என்றார் அவர்.
பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர் Hilman Idham கொள்கையுரையாற்றிய போது, முதல் வரிசையில் அதன் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் அருகில் கேசவன் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேசவனை வரவேற்கும் விதமாக Hilman ம.இ.காவின் பெயரை உச்சரித்த போது, அரங்கமே அதிரும் வண்ணம் பேராளர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
இது வைரலான நிலையில், எதிர்கட்சி கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பில் ம.இ.காவிடமிருந்து எழுத்துப்பூர்வ விளக்கம் கோரப்படும் என, தேசிய முன்னணித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.
அது குறித்து கேட்ட போதே விக்னேஸ்வரன் அவ்வாறு சொன்னார். தனது அரசியல் எதிர்காலம் குறித்து ம.இ.கா யாருடனும் பேச்சுவார்த்தை நடத்துமென விக்னேஸ்வரன் ஏற்கனவே குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
சில மாநில ம.இ.கா பேராளர் மாநாடுகளிலும், தேசிய முன்னணியிலிருந்து வெளியேறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



