
கோலாலம்பூர், ஜூலை 25- நாளை கூட்டரசு தலைநகரில் நடைபெறும் அமைதி பேரணியில் பங்கேற்பவர்கள் சட்டத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு பொது அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும்படி தேசிய போலீஸ் படைத்தலைவர் டத்தோஸ்ரீ Mohd Khalid Ismail கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர்கள் வெளிப்படுத்த விரும்பும் ஒவ்வொரு குரலும் பரஸ்பர மரியாதைக்குரிய சூழலிலும், மலேசிய சமூகத்தின் மரியாதை மற்றும் பழக்கவழக்கங்களின் மதிப்புகளின் அடிப்படையிலும் வெளிப்படுத்தப்பட முடியும் என Mohd Khalid நம்பிக்கை தெரிவித்தார்.
பேரணியில் பங்கேற்காத பொது மக்கள், தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதுடன் , நடப்பு போக்குவரத்து தகவல்களைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பேரணியின் போது போக்குவரத்து சற்று மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், எந்தவொரு சிரமத்தையும் தாமதத்தையும் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
PAS கட்சியினால் ஆதரிக்கப்படும் இந்த பேரணியில், அரசு சாற்பற்ற அமைப்புகள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 10,000 முதல் 15,000 பேர் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுப் பாதுகாப்பு தொடர்ந்து பராமரிக்கப்படும் என்பதோடு , மக்களின் சுதந்திரம் தொடர்ந்து மதிக்கப்படும் என்றும் போலீஸ் உறுதியளிப்பதாக ஐ.ஜி.பி. வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.