
குவந்தான், ஏப் 9 – வங்கிக் கடன்களைப் பெற ஏமாற்றி, பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டிய மோசடிப் பேர்வழிகளால் ஆசிரியை ஒருவர் 270,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக மோசடிக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூரியர் டெலிவரி தொழிலாளியாக ஆள்மாறாட்டம் செய்த ஒரு நபரிடமிருந்து 31 வயதான அந்த ஆசிரியைக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து அவர் மோசடிக்கு உள்ளானதாக பகாங் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் ( Yahaya othman ) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு பார்சல் இருப்பதாகவும், அதில் MyKad டின் மூன்று பிரதிகள் மற்றும் ஏழு வங்கி Debit கார்டுகள் இருப்பதாகவும் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட மற்றொரு அழைப்பாளர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணைகளுக்கு உதவ பல நிதி நிறுவனங்களிடமிருந்து தனிப்பட்ட வங்கிக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்படி அந்த ஆசிரியை பணிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்காக அனைத்துப் பணத்தையும் பணமோசடி தடுப்புப் பிரிவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கணக்குகளுக்கு மாற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 9 ஆம்தேதிவரை 16 வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 270,120 ரிங்கிட்டை 18 முறை அந்த ஆசிரியை பட்டுவாடா செய்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அந்த ஆசிரியை போலீசிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட பின்னரே தாம் மோசடி கும்பலால் ஏமாந்துள்ளதை உணர்ந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளானதோடு இது குறித்து புகார் செய்துள்ளதாக யஹ்யா தெரிவித்தார்.