
புத்ராஜெயா, பிப்ரவரி-1 – காசா மறுகட்டமைப்பு முயற்சிகளை நிராகரிப்பது, நிராகரிப்பவர்களின் தார்மீக அறியாமையைக் காட்டுவதாக, பிரதமரின் முதன்மை அரசியல் செயலாளர் சாடியுள்ளார்.
போரினால் சீரழிந்த காசாவில் மசூதிகள் மற்றும் பள்ளிகளை மீண்டும் கட்டியெழுப்ப மலேசியா சார்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.
அதனைப் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமலாவது இருக்கலாமே என முஹமட் காமில் அப்துல் முனிம் (Muhammad Kamil Abdul Munim) கூறினார்.
நமது தேசிய எல்லைகளுக்குள் கொடுமை நடந்தால் மட்டுமே நாம் குரல் கொடுத்து நீதிக்காகப் போராட வேண்டுமென்றால், கடந்த காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை நாம் கடுமையாகக் கண்டித்திருக்கக் கூடாது; போஸ்னியாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியிருக்கக் கூடாது என, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.
போஸ்னியா துயரத்தில் உலகமே அமைதி காத்த போது, மலேசியா தூரத்திலிருந்து ஒற்றுமையுடன் நின்றது மட்டுமல்லாமல், அமைதி காக்கும் படைகளை அனுப்பி, இராணுவ உதவியை வழங்கியது மறந்திடக் கூடாது.
ஆக, இப்போது பாலஸ்தீனத்தின் மீது அக்கறை காட்டுவது என்பது சொந்த மக்களின் நலன்களைப் புறக்கணிக்கிறோம் அல்லது தியாகம் செய்கிறோம் என்று எப்படி அர்த்தமாகுமென காமில் கேள்வி எழுப்பினார்.
பாலஸ்தீனத்துக்கு உதவ நாம் ‘மிகத் தொலைவில்’ இருப்பதாகக் ஒரு சிலர் கருதுவதால் மட்டுமே, மலேசியா தனது மனிதாபிமான முயற்சிகளை நிறுத்தாது என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
காசாவின் மறுகட்டமைப்புக்கு உறுதியளிப்பதற்கு முன் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மடானி அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, தேசிய முன்னணி காலத்து மூத்த அமைச்சர் தான் ஸ்ரீ ரஃபிடா அசிஸ் கூறியிருந்ததாக, முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.