
கோலாலம்பூர், பிப்ரவரி-19 – கடந்தாண்டு அமைச்சரவை உறுப்பினர்கள் 236 வெளிநாட்டு அலுவல் பயணங்களை மேற்கொண்டனர்; அவற்றுக்கு அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 44 மில்லியன் ரிங்கிட்டாகும்.
ஆக அதிகமாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் 39 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார்.
அவருக்கு அடுத்த நிலையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 19 தடவை அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.
முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு சா’ஃவ்ருல் அசிஸ் 18 முறையும், சுற்றுலா அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் 15 தடவையும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டர்.
ஐநா உட்பட பல்வேறு உலக அமைப்புகளில் மலேசியா அங்கம் வகிப்பதால், பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் கேற்கொள்கின்றனர்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் கடந்த 2022 முதல் 2025 வரை 31 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்பயணங்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட நிதி நிர்வாக நடைமுறையைப் பின்பற்றுவதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாஃபா மக்களவையில் கூறினார்.
அச்செலவுகள் விவேகமானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை அரசாங்கம் எப்போதும் உறுதிச் செய்து வருகிறது.
ஒவ்வொரு பயணமும், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு ஏற்ப, அதிகபட்ச கூடுதல் மதிப்பை அடைய கவனமாக திட்டமிடப்படுவதாக சாலிஹா கூறினார்.