
அலோர் ஸ்டார், அக்டோபர்-22 – பொது மக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலானதால், கெடா மந்திரி பெசார் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கோத்தா ஸ்டார், ஜாலான் பெகாவாய் இரவுச் சந்தை அருகே அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இரு ஆடவர்கள் செய்த புகாரின் அடிப்படையில் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டதாக, கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் சித்தி நோர் சாலாவாத்தி சாஆட் (Siti Nor Salawati Saad) தெரிவித்தார்.
இரு தரப்புகளின் வாக்குமூலங்களும் பதிவுச் செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கொண்டு விசாரணை நடைபெறுவதாக அவர் சொன்னார்.
முன்னதாக வைரலான வீடியோவில், காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் ஓர் ஆடவருடன் பொது மக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காண முடிந்தது.