
கோலாலம்பூர், மார்ச்-10 – டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் சம்பந்தப்பட்டது உள்ளிட்ட அனைத்து மத விவாதங்களையும் தவிர்க்குமாறு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங், அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தியுள்ளார்.
மத வேறுபாடுகளை மையமாகக் கொண்ட விவாதங்கள் நாட்டில் பதற்றத்தைத் தூண்டுவதோடு, மதங்களுக்கிடையிலான உறவுகளைப் பாதிக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
ஒற்றுமையை வளர்ப்பதற்கான முயற்சிகளைப் புறக்கணித்து, வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துவதே ஒரே நோக்கமாக இருந்தால், மதம் தொடர்பான விவாதங்களைத் தொடரக்கூடாது.
மத விவாதங்கள் உண்மையில் சமூகத்திற்குள் உள்ள பன்முகத்தன்மை குறித்து முழு மரியாதையுடனும் விழிப்புணர்வுடனும் நடத்தப்பட வேண்டும் என அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகள் இருக்கலாம்; என்றாலும், மலேசியர்களை ஒன்றிணைக்கக்கூடிய பொதுவான தன்மைகள் மற்றும் உலகளாவிய மதிப்புகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்றார் அவர்.
எனவே, சமூகத்தின் பன்முகத்தன்மையை மதித்து புரிந்துணர்வை மேம்படுத்த அமைச்சால் நிர்வகிக்கப்படும் Dialog Harmoni தளத்தை, ஓர் ஊடகமாகப் பயன்படுத்துவது அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஏரன் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், சமூகங்கள் அல்லது தனிநபர்கள் என அனைவரும் ஒற்றுமையை வளர்ப்பதிலும், நாட்டின் நல்வாழ்வை உறுதிச் செய்வதிலும் தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என்றார் அவர்.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவரான சரவணன், காவடி ஏந்துபவர்கள் தொடர்பில் சம்ரி வினோத் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து, அவருடன் மார்ச் 23-ஆம் தேதி ஒரு பொது விவாதத்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.
அதனை மலேசியத் தமிழ் மொழி மன்றம் ஏற்பாடு செய்யும் என்றும் அவர் கூறினார்.