
வத்திகன் சிட்டி, ஏப்ரல்-23, வத்திகன் சிட்டியில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கில், மலேசியா சார்பில் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் பங்கேற்பார்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக, ஒற்றுமை அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
எனினும் அவர் யார் என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை.
போப்பாண்டவரின் மறைவுக்கு மலேசியாவின் அனுதாபத்தையும் அமைச்சரவை தெரிவித்துக் கொண்டது.
கோலாலம்பூரில் உள்ள வத்திகன் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில், மலேசியா சார்பில் தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் எவோன் பெனடிக் கையெழுத்திட்டுள்ளதாக ஃபாஹ்மி சொன்னார்.
காசா உள்ளிட்ட அனைத்துலக விஷயங்களில் உரக்கக் குரல் கொடுத்தவர் என போப்பாண்டவர் ஃபிரான்சிஸுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியதையும் ஃபாஹ்மி மறு உறுதிப்படுத்தினார்.
2013-ஆம் ஆண்டு போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரான Jorge Mario Bergoglio, அதன் மூலம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைகளின் தலைவரான முதல் லத்தின் அமெரிக்கர் என்ற பெருமையைப் படைத்தார்.
இந்நிலையில், நீண்ட காலமாகவே உடல் நலம் குன்றியிருந்த போப்பாண்டவர் ஃபிரான்சிஸ், கடுமையான இரட்டை நிமோனியா தாக்குதலால் தனது 88-ஆவது வயதில் திங்கட்கிழமை உயிரிழந்தார்.
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகள் வத்திக்கன் நகரின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்.
பின்னர் ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்