
போர்டிக்சன், ஏப்ரல்-11, போர்டிக்சனில் சீன மொழியில் வைக்கப்பட்டு வைரலாகியுள்ள சாலைப் பெயர்ப் பலகைக்கு பெர்மிட் உண்டா இல்லையா என்பது விசாரிக்கப்படும்.
ஊராட்சித் துறைக்கான நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன் அதனைத் தெரிவித்தார்.
தனக்குத் தெரிந்த வரை, ஏற்கனவே அங்கு மலாய் மொழியில் வைக்கப்பட்ட அசல் பெயர்ப் பலகைக்குத் துணையாகவே இந்த சீன மொழிப் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
அந்த மலாய் பெயர்ப் பலகையும் இன்னமும் அங்கே தான் உள்ளது.
கிராமக் குடியிருப்பாளர் சங்கத்தின் முயற்சியில் 2017-ஆம் ஆண்டே அது நிறுவப்பட்டுள்ளது.
திடீரென இப்போது ஏன் அது சர்ச்சையாக்கப்படுகிறது எனத் தெரியவில்லை.
அது அங்கு பொருத்தப்பட்டது தொடர்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை; ஆனால், முறைப்படி அனுமதி பெற்று தான் அது நிறுவப்பட்டதா என்பதை தாம் உறுதிச் செய்துகொள்ள வேண்டியிருப்பதாக அருள் சொன்னார்.
தேசிய மொழி அல்லாத மொழியில் சாலைப் பெயர்ப் பலகைகளை வைக்க ஊராட்சி மன்றங்களின் அனுமதித் தேவை என்றார் அவர்.
போர்டிக்சன் கம்போங் சுங்கை நிப்பாவில் உள்ள அப்பெயர்ப் பலகை, தேசிய மொழியை அவமதிக்கும் செயல் எனக் கூறி டிக் டோக்கில் சர்ச்சை கிளம்பியுள்ளது குறித்து அருள் கருத்துரைத்தார்.