
போர்ட் கிள்ளான் , ஜூலை 23 – போர்ட் கிள்ளான் தீர்வையற்ற மண்டலப் பகுதியில் மே மற்றும் ஜூன் மாதங்களில் 83 கொள்கலன்களில் இருந்து 9.17 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 1,960 டன் பழைய உலோகங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சுங்கத்துறையின் அமலாக்கப் பிரிவு , தேசிய இலக்கு மையத்தின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது அந்த உலோகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் சுங்கத்துறை இயக்குநர் முகமட் அஷார் அகமட் பஹாரசி ( Mohamad Azhar Ahmad Paharazi ) தெரிவித்தார்.
இறக்குமதி பெர்மிட் இன்றி அந்த உலோகப் பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக 83 கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் பறிமுதல் நடவடிக்கை மூலம் தெரியவந்ததாக அவர் கூறினார்.
பழைய உலோகத்தை இறக்குமதி செய்வது, சுங்கத்துறையின் 2023ஆம்ஆண்டு இறக்குமதி தடை உத்தரவின் கீழ் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள, சிரிம் பெர்ஹாட் வழங்கிய இறக்குமதி அனுமதிக்கு உட்பட்டது என பூலாவ் இண்டாவில் சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முகமட் அஷார் கூறினார்.
அலுமினியக் கலவை, அலுமினியப் பொருட்கள், கணினி கூறுகள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் பதப்படுத்தப்படாத அலுமினியம் எனப் பொருட்களை அறிவித்து, கும்பல் தவறான தகவல்களை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
தொடக்கக்கட்ட விசாரணையில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் பல நாடுகளிலிருந்து உலோகங்கள் இறக்குமதி செய்யப்பட்டதைக் காட்டுகின்றன.