
கோலாலம்பூர், அக் 24 – ஒரு பெண்ணும் அவளது காதலனும் சேர்ந்து தனது மகள், மருமகன் மற்றும் உறவினர்களை போலி முதலீட்டுத் திட்டத்தில் 1.2 மில்லியன் ரிங்கிட் ஏமாற்றியுள்ளது இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. கெந்திங் மலையில் சூதாட்ட ஜங்கிட் நடவடிக்கையில் முதலீடு செய்வதன் மூலம் 10 விழுக்காடு லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி 27 வயது கிறிஸ்டியும் அவரது கணவர் 33 வயது ஜோன் ஏமாந்துள்ளனர். தாங்கள் அனுமதி பெற்ற சூதாட்ட ஏற்பாட்டாளர் என தனது மாமியாரும் அவரது கதாலனும் கூறியதால் முதலீடு செய்த பணத்தை பறிகொடுத்திருப்பதாக ஜோன் தெரிவித்தார். இந்த முதலீட்டிற்கு ஒருவர் 50,000 ரிங்கிட் பணம் செலுத்த வேண்டும் என தனது மாமியாரே கூறியதால் அவர் மோசடி செய்வார் என சிறிதுகூட நினைக்காமல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்ததாக ஜோன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த திட்டத்தில் நாங்கள் 500,000 ரிங்கிட் முதலீடு செய்தோடு, எங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் மேலும் 700,000 வெள்ளி முதலீட்டையும் பெற்று தந்தோம் என ஜோன் – கிறிஸ்டி தம்பதியர் தெரிவித்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கிடையே 1.2 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்தோம். ஒரு ஆண்டிற்குள் லாபம் கிடைக்கும் என எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஒரு ஆண்டு கடந்தன. 200,000 ரிங்கிட்டை மட்டுமே பெற்றோம், அதன் பிறகு எந்தவொரு வருமானத்தையும் பெறவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் குவந்தானில் போலீசில் புகார் செய்துள்ளதாக மலேசிய அனைத்துலக மனிதாபிமான இயக்கத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ ஹிஷாமுடின் ஹசிம் செய்தியாளர்களிடம் கூறினார்.