
ஜோகூர் பாரு, ஜனவரி-19, ஜோகூர் பாலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர்கள், காரை நிறுத்தி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுவதை மாநில போலீஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
‘Singaporean’s Guide To JB’ என்ற facebook பக்கத்தில் முன்வைக்கப்பட்ட அக்குற்றசாட்டைக் கடுமையாகக் கருதுவதாக, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.
போலீஸாரை படமெடுத்து, அவர்கள் லஞ்சம் வாங்கியதாக புரளியைப் பரப்பியவர்களைத் தேடி வருவதாக அவர் சொன்னார்.
அவர்களின் அச்செயலால் போலீஸின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதை ரவூப் சுட்டிக் காட்டினார்.
வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அமுலாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த 4 போக்குவரத்துப் போலீஸ்காரர்கள், வரிசையை முந்திச் சென்ற வாகனங்களுக்கு குற்றப்பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.
மொத்தமாக 69 சம்மன்கள் வெளியிடப்பட்டன.
நால்வரையும் விசாரித்ததில், லஞ்சம் வாங்கியதை அவர்கள் மறுத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்த CCTV கேமரா பதிவுகளையும் விரிவாக ஆய்வு செய்யவிருப்பதாக ரவூப் கூறினார்.