
கோலாலாம்பூர், செப்டம்பர்-9 – முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட்டுக்குச் சொந்தமான சொத்துக்கள் குறித்து பிரிட்டன் அதிகாரிகளிடமிருந்து மலேசியா விரிவான தகவல்களைக் கோருகிறது.
மகாதீர் மீதான விசாரணை இன்னும் தொடருவதாகக் கூறிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி, வெளிநாட்டு அதிகாரிகளிடமிருந்து விரிவான தகவல்களைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொன்னார்.
தகவல்களைப் பெற முடிந்தால், பின்னர் அறிவிப்போம் என்றார் அவர்.
இவ்வாண்டு தொடக்கத்தில், மகாதீரின் மகன்கள் செய்த சொத்து அறிவிப்புகளில் MACC திருப்தி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தான் ஸ்ரீ மொக்சானி மகாதீரின் மொத்த சொத்துக்கள் சுமார் RM1 பில்லியன் என்றும், தனிப்பட்ட மதிப்பு RM316 மில்லியன் என்றும் அவர் அறிவித்தார்.
அதே சமயம் அவரின் சகோதரன் மிர்சான் மொத்தம் RM246.2 மில்லியன் சொத்துக்களை அறிவித்தார், தனிப்பட்ட மதிப்பு RM120 மில்லியன் என்றும் அறிவித்தார்.
மொக்சானி – மிர்சான் இருவரும் தங்கள் சொத்துக்களை நேரடியாக தன்னிடம் அறிவித்ததாக அசாம் பாக்கியே அப்போது உறுதிப்படுத்தியிருந்தார்.