ஈப்போ, ஜனவரி-22 – பேராக்கில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் போன்றவற்றில் மதுபானங்களை விற்கத் தடை விதிக்கும் மாநில அரசின் திட்டத்திற்கு பாஸ் கட்சி ஆதரவுத் தெரிவித்துள்ளது.
மதுபானத்தால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் கேடுகளை பெரும்பாலான முஸ்லீம் அல்லாதோர் நன்கறிவர்.
அதோடு, முஸ்லீம்களின் உரிமை குறிப்பாக அவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அவர்களுக்குள்ள உரிமையையும் முஸ்லீம் அல்லாதோர் நிச்சயம் மதிப்பர்.
எனவே, முஸ்லீம் அல்லாத அரசியல் கட்சிகள் இவ்விவகாரத்தை அரசியலாக்கி குளிர்காய வேண்டாமென, பேராக் பாஸ் ஆணையர் ரஸ்மான் சக்காரியா (Razman Zakaria) நினைவுறுத்தினார்.
சொல்லப் போனால் இது சர்ச்சைக்குரிய விஷயமே அல்ல.
பேராக்கில் அமைதியும் நிலைத்தன்மையும் நீடிக்க, மக்களிடையே விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை முக்கியமென மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ரஸ்மான் சொன்னார்.
ஈப்போவில் குறிப்பிட்ட இடங்களில் மதுபான விற்பனைக்கான தடை விரிவுப்படுத்தப்படுவதை, MCA பிரச்னையாக்கியிருப்பது குறித்து அவர் கருத்துரைத்தார்.
ஈப்போ மாநகர மன்றத்தின் அம்முடிவை ஆட்சேபிக்காமல் DAP மௌனம் காப்பதாக, பேராக் MCA தகவல் பிரிவுத் தலைவர் Chung Kok Heung சாடியிருந்தார்.
MCA-வின் எதிர்ப்பை அம்னோ இளைஞர் பிரிவும் கண்டித்திருந்தது.