குவாலா திரங்கானு, டிசம்பர்-27 – குவாலா திரங்கானு, சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் வார்ட்டின் கவனக்குறைவால், பிறந்து 2 தினங்களே ஆன தனது பெண் குழந்தை கீழே விழுந்ததாக இளம் தந்தை ஒருவர் புகார் கூறியுள்ளார்.
தற்போது 41 நாட்களாகி விட்ட அக்குழந்தை, அச்சம்பவத்திற்குப் பிறகு அடிக்கடி வலிப்பு வந்து அவதிப்படுவதாக, 24 வயது Muhammad Syarifuddin Manan தெரிவித்தார்.
மஞ்சள் காமாலையால் டிசம்பர் 17-ஆம் தேதி வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படும் போது, அவரின் குழந்தைத், தொட்டிலிலிருந்து விழுந்திருக்கிறது.
3.3 கிலோ கிராம் எடையில் ஆரோக்கியமாகப் பிறந்த அக்குழந்தை, கீழே விழுந்து தலையில் அடிபட்டதிலிருந்து முன்பு போலில்லை.
இரத்தக் கசிவுடன் அடிக்கடி வலிப்பு வந்து மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குழந்தைக் கீழே விழுந்த CCTV கேமரா பதிவுகளைப் பார்க்கவும் மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை.
எனவே வேறு வழியின்றி போலீசில் புகார் செய்திருப்பதாக, Syarifuddin கூறினார்.
சாலையின் மேற்பரப்பில் குழந்தையின் தலை பட்டதாக தந்தைக் கூறினாலும், அது கவனக்குறைவால் அல்ல, மாறாக சாலையின் மேற்பகுதி சீராக இல்லாமல் மேடும் பள்ளமுமாக இருந்ததால் துரதிஷ்டவசமாக ஏற்பட்ட சம்பவமே என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக Kosmo Online செய்தி வெளியியிட்டுள்ளது.