
கோலாலம்பூர், ஜனவரி-21 – STPM, Matriculation உட்பட, Pre-U எனப்படும் பட்டப் படிப்புக்கு முந்தைய தேசியக் கல்வி அமைப்பு முறையை உயர் கல்வி அமைச்சு முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை, CUMIG எனப்படும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய பட்டதாரிகள் சங்கம் வரவேற்றுள்ளது.
இது நாட்டின் கல்வி சீர்திருத்தத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம் என அது வருணித்தது.
அதே நேரத்தில், STPM, Matriculation, Foundation, Diploma ஆகிய வழித்தடங்களில் 4.0 CGPA பெற்ற மாணவர்களுக்கு பொது உயர் கல்விக் கூடங்களில் இடம் உறுதிச் செய்யப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு, merit மதிப்பீட்டின் நியாயத்தன்மை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
பட்டப்படிப்புக்குச் செல்ல பல்வேறு பாதைகள், வெவ்வேறான பாடத்திட்டம், மதிப்பீட்டு முறை மற்றும் கல்வித் திறன் அளவுகள் இருப்பதால், அனைவரையும் ஒரே அடிப்படையில் மதிப்பிட பொதுவான தரச்சான்று அவசியமென CUMIG கருதுகிறது.
இதற்காக, மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற போட்டி அதிகமுள்ள படிப்புகளுக்கு தேசிய நுழைவுத் தேர்வு ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என CUMIG பரிந்துரைத்துள்ளது.
“இந்த பரிந்துரையானது, கூடுதல் தேர்வுகள் மூலம் மாணவர்களின் சுமையை அதிகரிப்பதற்காக அல்ல; மாறாக, அனைத்து கல்விப் பாதைகளிலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் சமநிலையிலான முறையில் மதிப்பீடு செய்யப்படுவதை உறுதிச் செய்யவும், அவர்களின் நலன்களை பாதுகாக்கவும் முன்வைக்கப்படுகிறது” என CUMIG விளக்கியது.
முறையாக வடிவமைக்கப்பட்ட ஒரே மாதிரியான மதிப்பீட்டு முறையே, தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என அது கூறிற்று.
மேலும், ஒவ்வொரு முக்கியப் படிப்புக்கும் இருக்கும் இடங்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று CUMIG வலியுறுத்தியுள்ளது.
கல்வி சீர்திருத்தத்திற்கு அதன் நல்ல நோக்கம் மட்டுமே போதாது…
நியாயமும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட கொள்கை வடிவமைப்பே முக்கியம் என CUMIG இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியது.



