லண்டன், டிசம்பர்-12 – ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், பிரிட்டனின் டிரினிட்டி லாபன் (Tirinity Laban) அமைப்பின் கௌரவத் தலைவராக ஐந்தாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
டிரினிட்டி லாபன் இசை, இசை நாடகம் மற்றும் சமகால நடனம் ஆகியவற்றுக்கான பிரிட்டனின் ஒரே காப்பகமாகும்.
இந்தியாவில் 125 ஆண்டு கால இசைக் கல்வி வரலாற்றைக் கொண்டுள்ள டிரினிட்டி லாபன், தமிழகத்தின் சென்னையில் உள்ள ரஹ்மானின் KM இசைக் காப்பகத்துடன் கொண்டுள்ள அணுக்கமான
ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக இந்நியமனம் அமைகிறது.
லண்டனில் நேற்று நடைபெற்ற அக்காப்பகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ரஹ்மானுக்கு அந்த கௌரவம் முறைப்படி வழங்கப்பட்டது.
கிழக்கு பாரம்பரிய இசை, உலக இசை, மேற்கத்திய ஆர்க்கெஸ்ட்ரா இசை என அனைத்து இசைத் துறைகளிலும் சிறந்து விளங்கும் ரஹ்மானை, கௌரவத் தலைவராகப் பெறுவதில் டிரினிட்டி லாபன் பெருமைக் கொள்வதாக அதன் தலைவர் பேராசியர் Anthony Bowne கூறினார்.
மாபெரும் இசைக் காப்பகமான டிரினிட்டி லாபன், கௌரவத் தலைவர் பொறுப்பைக் கொடுத்து தம்மைப் பெருமைப் படுத்தியிருப்பதாக, தமது ஏற்புரையில் குறிப்பிட்ட ரஹ்மான், பிரிட்டன்-இந்தியா இடையிலான இசைத் துறை ஒத்துழைப்பு வரும் காலங்களில் மேலும் வலுவடையுமென நம்பிக்கைத் தெரிவித்தார்.
ரஹ்மானின் நியமனத்தை மேலும் கொண்டாடும் விதமாக, அடுத்தாண்டு மார்ச் 25-ஆம் தேதி லண்டனில் உள்ள பிரபல கச்சேரி அரங்கான Blackheath Halls-சில் இந்திய இசைக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரஹ்மானின் KM இசைக் காப்பகத்தைச் சேர்ந்த மாணவர்களின் படைப்புகள் அதில் இடம் பெறுமென, டிரினிட்டி லாபன் தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
ரஹ்மான் 2008-ஆம் ஆண்டில் KM இசைக் காப்பகத்தை அமைத்ததிலிருந்து, பட்டறைகள், மாணவர் வேலைவாய்ப்பு, மாஸ்டர் வகுப்புகள் என இரு தரப்பும் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன.
அதோடு, வசதிக் குறைந்தப் பிள்ளைகளுக்கு இசைக் கல்வி வழங்கும் நோக்கில் 2009-ல் தொடங்கப்பட்ட
ரஹ்மானின் Sunshine Orchestra இசைக் குழுவுக்கும் டிரினிட்டி லாபன் ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.