ஷா ஆலாம், டிசம்பர்-5 – மற்ற மதங்களை ஒருபோதும் இழிவுப்படுத்தத் கூடாது என, சமயச் சொற்பொழிவாளர்களுக்கு சிலாங்கூர் சுல்தான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மற்ற சமயத்தாரின் நம்பிக்கைகளை குறிப்பிட்ட சில நபர்கள் இழிவுப்படுத்தி வருவது கவலையளிப்பதாக சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா சொன்னார்.
சமூக ஊடகங்களில் அத்தகையப் போக்கு அதிகரித்து வருகிறது.
இதனால் தான், சிலாங்கூர் முழுவதும் தாம் கலந்துகொள்ளும் வெள்ளிக்கிழமை குத்பா சொற்பொழிவுகளின் போது, மற்ற மதங்களை இழிவுப்படுத்தக் கூடாதென்பதை தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் சொன்னார்.
எனினும், மதங்களுக்கு இடையிலான வேறுபாட்டை பொது மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை; அது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என The Star நாளேட்டுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் சுல்தான் ஷாராஃபுடின் சொன்னார்.
இஸ்லாம் நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாகும்; ஆனால் மற்ற சமயங்களைப் பின்பற்றவும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.
எனவே, பல்லின மக்கள் வாழும் நாட்டில் குறிப்பாக சிலாங்கூரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு இடமில்லை.
மசூதிகள், சீன கோவில்கள், இந்து ஆலயங்கள், இந்திய முஸ்லீம் வழிபாட்டுத் தலங்கள் என நல்லிணக்கச் சூழல் நிலவும் சிலாங்கூரில் ஒற்றுமை நிலைநாட்டப் பட வேண்டும்.
அதனைக் கெடுக்கும் வகையில் நடந்துகொள்வோருக்கு அனுசரணை காட்டப்படாது என சிலாங்கூர் சுல்தான் எச்சரித்தார்.