
மலாக்கா, மார்ச்-23 – மலாக்கா, டத்தாரான் பஹ்லாவானில் உள்ள பேரங்காடியொன்றில், பிள்ளைகளுடன் சென்றுகொண்டிருந்த தாயைப் பின்தொடர்ந்து பெண்ணொருவர் மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அதற்கு முன்பாக அப்பெண் தனக்குத் தானே பேசியதோடு கத்திக் கூச்சலிட்டும் கொண்டிருந்தார்.
பின்னர் ஒரு தாயுடன் சென்றுகொண்டிருந்த பிள்ளைகளைப் பின்தொடர்ந்த அம்மாது, திடீரென அவர்களை எட்டி உதைத்தார்.
இதனால் அந்த 36 வயது தாய் தவறி விழுந்து விட, அங்கிருந்தவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.
உடனடியாக அங்கிருந்த உதவி போலீஸார் அப்பெண்ணைக் கைதுச் செய்தனர்.
பின்னர் தகவல் கிடைத்து வந்துசேர்ந்த போலீஸ் சந்தேக நபரை மலாக்கா மருத்துவமனையில் சேர்த்தது.
பரிசோதனையில் 33 வயது அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஏற்கனவே பலமுறை அம்மருத்துமனையின் மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
எனவே, முன்னதாக வைரலான வீடியோ குழந்தைக் கடத்தல் முயற்சி அல்ல என போலீஸ் தெளிவுப்படுத்தியது.
உண்மைத் தெரியாமல் யூகங்களின் அடிப்படையில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.