
பெட்டாலிங், அக்டோபர்-14, மணவர்களைக் குறி வைக்கும் இணையத் தொந்தரவுகள் எல்லை மீறிப் போவதால் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு, மலாயாப் பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள், அதன் நிர்வாகத்தையும் அதிகாரத் தரப்பையும் வலியுறுத்தியுள்ளன.
அக்கோரிக்கைத் தொடர்பில் மலாயாப் பல்கலைக் கழக நெறிமுறை அலுவலகம் மற்றும் அதன் துணை வேந்தர்களின் அலுவலகங்களில், Demokrat UM மற்றும் NewGen UM மாணவர் அமைப்புகள் நேற்று மகஜர்களை வழங்கின.
‘UM Confessions’ என்ற பெயரில் டெலிகிராமில் செயல்படும் குழுவொன்றில் அந்த தொந்தரவுகள் நடைபெறுகின்றன.
எந்தவொரு விவகாரம் தொட்டும் தங்களின் கருத்துகளைப் பகிரக்கூடிய, தீங்கற்றத் தளமாக தொடங்கிய அந்த டெலிகிராம் குழு, தற்போது மற்றவரை புண்படுத்தி சிறுமைப்படுத்துவதோடு, ஆபாச உள்ளடகங்களாலும் நிரம்பி வழிவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
இன்றையத் தேதிக்கு அந்த டெலிகிராம் குழுவில் 7,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அக்குழுவில் பதிவேற்றப்படும் பெரும்பாலான கருத்துகள், மாணவர்களின் பெயரைக் குறிப்பிட்டு நேரடியாகத் தாக்குகின்றன.
இதனால், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மிகவும் ஆரோக்கியமற்றச் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்கலைக் கழக நிர்வாகத்தை வலியுறுத்திய மாணவர்கள், போலீஸ் மற்றும் மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையத்திடமும் (MCMC) புகார் செய்துள்ளனர்.