
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – கடந்தாண்டு மலேசியாவில் பதிவான புதிய எச்.ஐ.வி (HIV) நோயாளிகளில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் டுல்கிஃப்லி அஹ்மத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 2024-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 3,185 புதிய எச்.ஐ.வி வழக்குகளில், 75 சதவீதத்தினர் 20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய காலங்களில் போதை மருந்து ஊசிகள் பகிர்ந்து கொள்வதன் வழி தொற்றுகள் பரவி வந்தன என்றாலும் தற்போது பாலியல் தொடர்பு மூலமே பெரும்பாலான எச்.ஐ.வி தொற்றுகள் ஏற்படுகின்றன என்பதனை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் பதிவுச் செய்யப்பட்ட எச்.ஐ.வி நோயாளிகளில் 96 சதவீதத்தினர் பாலியல் தொடர்பின் வழியும், 64 சதவீதத்தினர் ஓரினச்சேர்க்கையில் தொடர்புடையவர்கள் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலுரைத்துள்ளார்.
ஆய்வுகளின் அடிப்படையில் 1990களின் தரவுகளுடன் ஒப்பிடும் போது, தற்போது நோயாளிகளில் 99 சதவீதத்தினர் ஆண்கள் என்றும் 1 சதவீதத்தினர் மட்டுமே பெண்களாக இருக்கின்றனர்.
2000 முதல் 2009 ஆம் ஆண்டு வரை, புதிய எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் (AIDS) நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்திருந்த நிலையில் தற்போது அதன் குறைவு விகிதம் 27 சதவீதம் மட்டுமே இருப்பது கவலையளிக்கின்றது.