
காஜாங், டிசம்பர் 27-மலேசியாவில், வரலாற்றிலேயே மிகப்பெரிய அனைத்துலகப் போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றத் தடுப்புப் பிரிவு நடத்திய Op Gaharu 2.0 சோதனை நடவடிக்கையில், ஸ்ரீ கெம்பாங்கான் மற்றும் கெப்போங்கில் மொத்தம் 6.2 டன் MDMA போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது, சுமார் 20.7 மில்லியன் பயனர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவாகும் என, அப்பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
இதன் மதிப்பு 1.04 பில்லியன் ரிங்கிட் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஹோங் கோங், ஆஸ்திரேலியா போன்ற அனைத்துலகச் சந்தைகளுக்கு கடத்தப்பட ஏதுவாக இந்த போதைப்பொருட்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.
இந்த அனைத்துலகப் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேர், டிசம்பர் 16-ஆம் தேதி கைதானதை அடுத்து, இப்பறிமுதல் சாத்தியமானது.
போதைப்பொருள் தயாரிப்பு உபகரணங்களும், அனைத்துலக கும்பலின் செயல்பாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெளிநாடுகள் மற்றும் அனைத்துலகப் போலீஸான INTERPOL உதவியுடன், அக்கும்பலைச் சேர்ந்த எஞ்சிய உறுப்பினர்கள் பிடிபடுவர் என ஓமார் கான் நம்பிக்கைத் தெரிவித்தார்.



