
கோலாலம்பூர், ஏப்ரல்-13, மலேசியா வாழ் வெளிநாட்டு தெலுங்கர்கள் சங்கமான TEAM நேற்று 9-ஆவது ஆண்டாக உகாதி தெலுங்குப் புத்தாண்டை கொண்டாடியது.
தலைநகர் விஸ்மா எம்.சி.ஏ கட்டடத்தில் மாலை 5 மணிக்குத் தொடங்கிய அந்நிகழ்வு, 2025-ஆம் ஆண்டுக்கான தெலுங்கு சமூகத்தின் பெருவிழாவாக அமைந்தது.
மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் பி.என்.ரெட்டி, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் ஆற்றிய மகத்தான சேவைக்காக தான் ஸ்ரீ நடராஜவுக்கு வாழ்நாள் சேவையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தெலுங்குக் கலாச்சார நடனங்கள், குலுக்குச் சீட்டு, உகாதி பச்சடி, தெலுங்கு சமூகத்தின் 8 வித பதார்த்தங்கள் அடங்கிய சாப்பாடு என விழா களைக் கட்டியது.
கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக இந்தியாவிலிருந்து பிரபல தெலுங்குப் பின்னணி பாடகி மங்லி தலைமையில் இசைக் கச்சேரியும் இடம் பெற்றது.
Together Everyone Achieves More அல்லது அனைவரும் சேர்ந்து மேலும் சாதிக்கலாம் என்ற சுலோகத்தில் இச்சங்கம் ஆக்ககரமாக செயல்பட்டு வருவதாக, அதன் தலைவர் அனில் குமார் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இங்குள்ள தெலுங்கு சமூகத்தினர் ஒன்றுகூடலாகவும் இந்நிகழ்ச்சி அமைந்ததாக அவர் சொன்னார்.