
கோலாலம்பூர், மார்ச்-7 – PLKN 3.0 என்ற பெயரில் தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் மீண்டும் அறிமுகம் கண்டிருப்பது, மேலும் ஏராளமான இந்தியர்களையும் சீனர்களையும் இராணுவச் சேவைக்குக் கவர்ந்திழுக்கும் என பெரிதும் நம்பப்படுகிறது.
தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் அவ்வாறு கூறியுள்ளார்.
டிசம்பர் 31 வரையிலான தகவலின் படி, மலேசிய இராணுவப் படையில் 1,670 பேர் மட்டுமே இந்தியர்கள் ஆவர்.
மொத்த படை பலத்தில் அது 1.4 விழுக்காடு என காலிட் சொன்னார்.
மலேசியக் கடற்படை, தரைப்படை, மற்றும் ஆகாயப்படையில் இந்தியர்களின் பங்கேற்பு குறித்து மக்களவையில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
நாட்டைப் பாதுகாக்கும் பணிக்கு மலாய்க்காரர் அல்லாதோர் உட்பட ஏராளமான இளைஞர்களைக் கவர்ந்திழுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பள்ளிகள் மற்றும் பேரங்காடிகளில் விளக்கக் கூட்டங்கள், விளம்பர நடவடிக்கைகள் போன்றவற்றை நடத்துவதும் அவற்றிலடங்கும்.
அதே சமயம், நாடு முழுவதும் வேலை வாய்ப்புக் கண்காட்சிகளிலும் இராணுவம் பங்கேற்பதாக அமைச்சர் கூறினார்.
இராணுவத்தில் ஏராளமான மலாய்க்காரர் அல்லாதோரை சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், அவர்களின் பங்கேற்பு 3 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருப்பதாக 2023-ல் அரசாங்கம் குறைப்பட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.