
கோலாலம்பூர், செப்டம்பர்-12 – பள்ளி விடுமுறை மற்றும் மலேசிய தின விடுமுறையை ஒட்டி இவ்வார இறுதியில் PLUS நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 2.2 மில்லியன் வரை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இன்றும் நாளையும், பின்னர் மக்கள் சொந்த ஊரிலிருந்து திரும்புவர் என எதிர்பார்க்கப்படும் செப்டம்பர் 19, 20-ஆம் தேதிகளிலும் அந்நிலை காணப்படலாம்.
இந்த 4 உச்ச நாட்களிலும் பயணம் செய்பவர்கள், PLUS செயலியில் தனது டிஜிட்டல் பயண நேர ஆலோசனை அட்டவணையான MyPLUS-TTA-வை சரிபார்க்குமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.
அண்மைய மேம்படுத்தலுக்குப் பிறகு, முன்பு போல் வெறும் பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், போக்குவரத்து உச்சத்திலிருக்கும் மற்ற நாட்களிலும் இந்த MyPLUS-TTA அட்டவணைப் பயன்பாட்டில் இருக்கும்.
PLUS 2 மற்றும் LPT2 நெடுஞ்சாலைகளில் வாகனமோட்டிகள் தங்கள் பயணங்களை ஆக்கப்பூர்வமாக திட்டமிட இது உதவிபுரியும்.
இதன் மூலம் நெடுஞ்சாலை போக்குவரத்து சுமூகமாகும் என்பதுடன் மக்களுக்கு நல்ல பயண அனுபவத்தைக் கொடுக்கும் என PLUS நம்பிக்கைத் தெரிவித்தது.
மலேசிய தினம் செவ்வாய்க்கிழமை வருவதால், நடுவில் திங்கட்கிழமையையும் சிறப்பு பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனால் நாளை சனிக்கிழமை தொடங்கி 4 நாட்கள் நீண்ட விடுமுறையை மலேசீயர்கள் பெறுகின்றனர்.