
நீலாய், மார்ச்-21- ஆசிரியர்கள், சமூக ஊடக உள்ளடக்கங்களுக்காக மாணவர்கள் குறிப்பாக ஆரம்பப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது.
குறிப்பாக டிக் டோக் வீடியோக்களுக்கு மாணவர்களைப் பயன்படுத்த வேண்டாமென, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் எச்சரித்துள்ளார்.
அது போன்ற படங்களையோ வீடியோக்களையோ பொறுப்பற்ற தரப்பினர், பாலியல் குற்றங்கள் உட்பட தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடும்.
மாணவர்களின் முகங்கள் அல்லது பெயர்கள் காட்டப்பட்டால் பாதுகாப்பு, தனிப்பட்ட தரவுகள் தொடர்பான பிரச்னைகள் எழலாம் என்றார் அவர்.
இது, மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்னைகளில் போய் முடியுமென, நெகிரி செம்பிலான் நீலாயில் ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஃபாஹ்மி நினைவுறுத்தினார்.
இணையம் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிச் செய்ய தமதமைச்சு, கல்வியமைச்சுடன் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் அவர் சொன்னார்.