பூச்சோங், செப்டம்பர் 20 – மாற்றுத் திறனாளியான e-hailing ஓட்டுநரை, அரச குடும்பத்தின் போலீஸ் மெய்க்காவலர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் மூடப்படவில்லை.
அதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த வழக்கின் விசாரணை நிலையை தாமே தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் இச்சம்பவம் தொடர்பாக ஆருடங்கள் கூறப்படுவதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வழக்கு விசாரணைக்குக் கால அவகாசம் தேவை. விசாரணை அறிக்கையைச் சட்டத்துறை அலுவலகம் பார்வையிட்டு, ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரலாமா வேண்டாமா என்பதை இறுதியில் முடிவு செய்யும் என்றார், அவர்.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட ஒங் இங் கியோங் (Ong Ing Keong) எனும் அந்த மாற்றுத் திறனாளி, இச்சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில் தாமதம் நிலவுவதாக அன்வாருக்கு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.