
கோலாலம்பூர், பிப்ரவரி-3 – தீபகற்ப மலேசியாவில் வரும் ஜூலை தொடங்கி மின்சாரக் கட்டணம் 14 விழுக்காடு அதிகரிக்கவிருப்பதாகக் கூறப்படுவதை, பிரதமர் மறுத்துள்ளார்.
எனினும், மறுஆய்வுக்குப் பிறகு அக்கட்டணம் நிச்சயம் உயருமென்பதை மறுப்பதற்கில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மின் உற்பத்தித் திறன் மற்றும் விலைகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டண உயர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றார் அவர்.
ஆனால் வெளியில் கூறப்படுவது போல் 14 விழுக்காடு வரை உயர்வு இருக்காது என்றார் அவர்.
மறுஆய்வின் போது பல்வேறு தரப்பினரின் கருத்துகள் பரிசீலிக்கப்படும்;
எது எப்படி இருப்பினும் மின் கட்டண உயர்வு அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் வகையிலிருப்பதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் உறுதியளித்தார்.
வரும் ஜூலை முதல் தீபகற்ப மலேசியாவில் அடிப்படை மின்சாரக் கட்டணத்தை 14.2 விழுக்காடு உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, பங்குச் சந்தைக்கு வழங்கிய அறிக்கையில் முன்னதாக TNB குறிப்பிட்டிருந்தது.
புதியக் கட்டண விகித பரிந்துரை அட்டவணையின் படி, ஒரு கிலோ வாட் மணி மின்சாரம் 45.62 சென்னாகும்.
என்றாலும், இவ்வாண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டண விகிதத்திலும் அமைப்பிலும் மாற்றமிருக்காது.
அதாவது, புதியக் கட்டண விகிதத்துடன் தங்களைப் பழக்கிக் கொள்ள பயனீட்டாளர்களுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படுமென TNB அப்போது விளக்கியிருந்தது.